| ADDED : மே 11, 2024 12:12 AM
கும்மிடிப்பூண்டி, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி, 'எம்.சாண்ட்' ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. கவரைப்பேட்டையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால், அங்கு இருபுறத்திலும் உள்ள இணைப்பு சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கவரைப்பேட்டை தனியார் கல்லுாரி எதிரே உள்ள இணைப்பு சாலையில் சென்ற போது, பின்புற டயர் வெடித்து பாரம் தாங்காமல், லாரி பழுதாகி நின்றது.குறுகிய சாலையில் லாரி பழுதாகி நின்றதால், அவ்வழியாக ஒரு கார் மட்டுமே செல்ல வழி இருந்தது. இதனால், சென்னை நோக்கி செல்ல இருந்த வாகனங்கள் அப்பகுதியில்ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்து சென்ற ரோந்து போலீசார், லாரி பழுதை சரி செய்ய நேரமாகும் என்பதால், போக்குவரத்தை எதிர் திசையில் திருப்பி விட்டனர்.எதிர்திசையிலும் குறுகிய சாலை என்பதால், அந்த திசையில் இடியாப்ப சிக்கல் போல் எதிர் எதிரே வாகனங்கள் சிக்கிக்கொண்டன.இதனால், இரு புற சாலையிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. புதுவாயலில் துவங்கி கும்மிடிப்பூண்டி வரையிலான, 10 கி.மீ., சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையிலான போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும், போக்குவரத்தை சீர் செய்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கு பின், பழுதான வாகனம் சரி செய்து இயக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக வாகன போக்குவரத்து சீரானது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண கவரைப்பேட்டை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.