புழல், இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.சென்னை, புழல் ரெட்டேரி சந்திப்பு முதல், செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரை, 5 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை விளக்குகள், 1 மாதமாக எரியாததால், அந்த சாலை இருளில் மூழ்கி உள்ளது. அதனால், புழல் சைக்கிள் ஷாப், கதிர்வேடு, புழல் - அம்பத்துார் சாலை சந்திப்பு, மத்திய சிறை, காவாங்கரை சாலை சந்திப்பு ஆகியவற்றில் சாலையைக் கடப்போர், வேகமாகக் கடந்து செல்லும் கனரக வாகனங்கள் மோதி, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மேலும், கனரக வாகனங்களில், விதிமீறி கொண்டு செல்லப்படும் இரும்புக் கம்பி உள்ளிட்ட பல்வேறு தளவாடப் பொருட்கள், லாரிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. சாலையின் இருட்டு காரணமாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், அவற்றை எளிதில் கவனிக்க முடியாமல், நிலைதடுமாறி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.சாலையும் பல இடங்களில் சேதமடைந்து, சமதளமற்ற நிலையில் உள்ளது. அதனாலும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள், மாதவரம் போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு அலுவலர்களிடம் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. விபத்து நடந்தால், அதற்கு காரணம் வாகன ஓட்டிகளின் வேகம், கவனக்குறைவு என்று, வழக்கு பதிவு செய்யும் போலீசார், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி அல்லது அலுவலரையும் குற்றவாளியாக சேர்த்து, வழக்கு பதிய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.