5 அதிகாரிகள் இடங்களுக்கு இரண்டே பேர் பற்றாக்குறை! வடசென்னையில் மின் தடை பிரச்னை தீவிரம்
திருவொற்றியூர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் நிலவும் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால், பணிகளை சரிவர மேற்கொள்ளாத சூழல் நிலவுகிறது. மின் வினியோகத்தில் ஏற்படும் தடங்களால் தற்போது மட்டுமின்றி, துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழைக்கும் வடசென்னை பெரிதும் பாதிக்கப்படும் என, அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், அத்திபட்டில், 1,830 மெகாவாட் திறனில், வடசென்னை மற்றும் விரிவாக்க அனல்மின் நிலையங்கள் உள்ளன.இங்கிருந்து, அலமாதி துணை மின் நிலையம் வாயிலாக, மணலி துணை மின் நிலையத்திற்கு, 400 / 230 கிலோ வாட் மின்சாரம் எடுத்து வரப்பட்டு, வடசென்னை, மத்திய சென்னை போன்ற பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.அதன்படி, மணலி உபகோட்டத்தில் மின்சாரம் சார்ந்த பணிகளை கண்காணிக்க, மணலி, சாத்தங்காடு, மணலி புதுநகர், நாப்பாளையம், ஜோதி நகர் ஆகிய இடங்களில், ஐந்து உதவி பொறியாளர்கள் பணியிடம் உள்ளது.ஒருவர், 8,500 - 19,500 வரை மின் இணைப்புகளை கவனிக்க வேண்டும். இதில், ஜோதி நகர், மணலி, சாத்தாங்காடு ஆகிய மூன்று உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மற்ற இரு உதவி பொறியாளர்களே, ஐந்து பகுதிகளின் அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர்.தவிர, களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையும் மிக குறைவு. இதன் காரணமாக, மின் வினியோகத்தில் சிறிய பழுது ஏற்பட்டாலும், அதை சரி செய்ய முடிவதில்லை.ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக வசதி காரணமாக, மணலியில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, 6 கி.மீ., துாரமுள்ள மணலிபுதுநகருக்கு மாற்றியுள்ளதால், அப்பகுதியினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல், திருவொற்றியூர் உப கோட்டத்திலும், சுனாமி குடியிருப்பு, காலடிப்பேட்டை உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒருவர், 15,000 - 18,000 இணைப்புகளை கவனிக்க வேண்டும்.இந்நிலையில், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில், ஒரு உதவி பொறியாளர், 45,000க்கும் மேற்பட்ட இணைப்புகள் குறித்த பணிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணியிடங்களும், 50 சதவீதம் காலியாகவே உள்ளன.இதன் காரணமாக, மின் தடை, மின்மாற்றிகள் பழுது, மின் கம்பங்கள் மாற்றம், மின் பெட்டிகள் உயர்த்துதல் போன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை.குறிப்பாக, மின் தடை ஏற்படும் சமயத்தில், அலுவலகத்திற்கு வரும் மொபைல் போன் அழைப்புகளுக்கு பதில் சொல்லக்கூட முடியாமல் ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.மின்சாரம் தடைபடுவதால், தொழில் உற்பத்தி பாதிப்பு, வீட்டு பணிகள் முடங்கி, மக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.வடசென்னை வாசிகள் கூறியதாவது:அலமாதி துணை மின் நிலையத்தில் தீ விபத்து போன்ற இக்கட்டான சூழலில், என்ன செய்வதென்றுகூட தெரியால், பொறுப்பு அதிகாரிகளால் முடிவு எடுக்க முடியவில்லை. மின் நிலைமை சீரடையவும் தாமதம் ஏற்படுகிறது.அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதுபோன்ற நிலைமை நீடித்தால், மழைக்காலத்தில் மின் பழுது சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை கவனிக்க முடியாமல், மின் வினியோகம் பெரிதும் பாதிக்கப்படும்.எனவே, மணலி மற்றும் திருவொற்றியூர் உபகோட்டங்களில் காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் களப்பணியாளர்கள் பணியிடங்களை 75 சதவீதம் அளவிற்காவது நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நுகர்வு அதிகம்மணலியில், 15 ஆண்டுகளுக்கு முன், ஒரு தெருவில் இரு வீட்டில் மட்டுமே 'ஏசி' இருக்கும். தற்போது இப்பகுதியில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மின் கம்பிகள், மின்மாற்றிகள் எண்ணிக்கை அதிகரிக்கப் படவில்லை. நுகர்வு அதிகரிக்கும் நேரத்தில், அதிக பளு காரணமாக, தினமும் மின் தடை ஏற்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ஆனந்த், 43,தொழில் முனைவோர், மணலி.மின்கம்பங்கள் 'அவுட்'திருவொற்றியூர் மேற்கு பகுதியில், அம்பேத்கர் நகர், ராஜாசண்முகம், காட்டுப் பொன்னியம்மன் நகர் என, 20க்கும் மேற்பட்ட நகர்களில், 15,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த பகுதி மின் வாரிய அலுவலகம், ஜோதி நகரில் செயல்படுகிறது. இங்கு, உதவி பொறியாளர் பணியிடம் ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ளது. மோசமான மின்கம்பங்களை மாற்ற, பல அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை கிடையாது. மேற்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில், குறைந்த மின் அழுத்த பிரச்னை உள்ளது. களப்பணியாளர்களும் இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது.- ஜி.கார்த்திக், 35,அம்பேத்கர் நகர் துணை செயலர்,திருவொற்றியூர்.