| ADDED : ஜூலை 19, 2024 12:19 AM
சென்னை, மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த 58 வயது நபர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அம்மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது கால்களில் புண் ஏற்பட்ட நிலையில், பாதத்தை அகற்ற டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, 'டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி' சிகிச்சை அளித்து, காலை அகற்றாமல் மருத்துவர்கள் குணப்படுத்தினர்.இதுகுறித்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனை பாதநோய் அறுவை சிகிச்சை நிபுணர் என்.சிவகுமார் கூறியதாவது:கடுமையான பாத புண்களில் பாதிக்கப்பட்டதால், போதிய அளவு ரத்த சுழற்சி இல்லாமல், பாதத்தை வெட்டி அகற்ற வேண்டிய நிலையில் நோயாளி இருந்தார். அத்துடன், உடலின் பிற பகுதிகளுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு இருந்தது.அவரது பாதத்தை அகற்றாமல், அறுவை சிகிச்சை வாயிலாக புண்ணில் சேதமடைந்த திசுக்கள் துல்லியமாக அகற்றப்பட்டன. புண்ணை குணமாக்க சுற்றியுள்ள அழுத்தத்தை தளர்வாக்கி நீக்கப்பட்டு, மூன்று வாரம் வரை டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நவீன சிகிச்சை முறையில், புண்ணில் பாக்டீரியா வளர்ச்சி குறைந்ததுடன், ரத்த நாளங்கள் உருவாவதையும் துாண்டியது. அதன்படி, இச்சிகிச்சை முறை, நீரிழிவு நோயால் பாதம் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிக்கு, 90 சதவீதம் பலனளிக்க கூடியது என கண்டறியப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.