| ADDED : மே 10, 2024 12:25 AM
சென்னை கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு, வாகன ஓட்டிகளின் நலனுக்காக சென்னை மாநகராட்சி சார்பில், 10 போக்குவரத்து சிக்னல்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரிப்பன் கட்டட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.பின், கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சாலை சிக்னல்களில் அமைக்கப்பட்டு வரும் நிழற்பந்தல்கள், 17 அடி உயரத்துடன், ஸ்டீல் கம்பிகளின் கட்டுமானத்துடன், மேலே போடப்படும் போரஸ் துணி கீழே விழாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக மண்பானைகளில் குடிநீர் வைக்கப்பட்டு, தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியில், 34,000 தெருக்கள் உள்ளன. முதற்கட்டமாக பேருந்து சாலைகள், முக்கிய சந்திப்புகள், அதிக போக்குவரத்து இருக்கக்கூடிய சிக்னல் பகுதிகளில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும். மழைக்காலங்களில், இவற்றில் சிறிது மாற்றம் செய்து, மேற்புறத்தில் 'பைபர்' அமைப்புகள் போடவும் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் கோரிக்கையின்படி, நெடுஞ்சாலையின் போக்கு வரத்து சிக்னல்களிலும், நிழற்பந்தல் அமைக்கப்படும். தன்னார்வ அமைப்புகளும், சாலை சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.