50 மின்சார ரயில்கள் சேவை மீண்டும் துவக்க கோரிக்கை
சென்னை:சென்னை புறநகரில் நிறுத்தப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவையை மீண்டும் துவங்க வேண்டுமென, பயணியர் நல சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்க தலைவர் முருகையன், சென்னை கோட்ட மேலாளரிடம் அளித்த மனு: சென்னை புறநகரில் மின்சார ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் மின்சார ரயில்கள் இல்லாததால், பயணியர் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி நடக்க உள்ளதாக கூறி, கடந்த ஆண்டில் சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில், 30 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், தாம்பரம் ரயில்வே பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக, கடற்கரை -- தாம்பரம் தடத்தில், 20க்கும் மேற்பட்ட ரயில்களும், மறு அறிவிப்பு வரையில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த மின்சார ரயில்களின் சேவை மீண்டும் துவங்கவில்லை. எனவே, பயணியர் தேவையை கருதி, நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களின் சேவையை படிப்டியாக மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.