உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் இருந்து திருத்தணிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

ஆவடியில் இருந்து திருத்தணிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

ஆவடி, சென்னை பாரிமுனையில் இருந்து அம்பத்துார், ஆவடி, திருவள்ளூர் வழியாக திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல தடம் எண்: 97 சி அரசு பேருந்து இயக்கப்பட்டது.கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட இந்த பேருந்து, பாடி சிவன் கோவில், திருமுல்லைவாயில் சிவன், பச்சையம்மன் கோவில், திருநின்றவூர் பெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் என, 89.01 கி.மீ., துாரத்திற்கு கோவில் நகரங்களை இணைத்தது.இதன் வாயிலாக பக்தர்கள் மட்டுமின்றி, மேற்கூறிய வழித்தடங்களில் உள்ள நகரவாசிகள், பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் சிறு வியாபாரிகள் பயனடைந்தனர். இந்நிலையில், 2004க்கு பின், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வழியாக திருத்தணி வரை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. சென்னை --- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், மோசமான சாலையை காரணம் காட்டி அவை நிறுத்தப்பட்டன. அதன்பின், கோயம்பேடில் இருந்து பூந்தமல்லி வழியாக திருத்தணி வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஆவடி, அம்பத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோயம்பேடு அல்லது பூந்தமல்லி சென்று திருத்தணி கோவிலுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, 20 ஆண்டுகளுக்கு மேலாக, நிறுத்தப்பட்டுள்ள, சென்னை - ஆவடி - திருத்தணி வழித்தடத்தில், மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் அல்லது ஆவடியில் இருந்து திருத்தணிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பக்தர்கள் தவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி செல்ல நாள் ஒன்றுக்கு 11 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, பண்டிகை நாட்களில், திருத்தணி முருகன் கோவிலுக்கு குறித்த நேரத்தில் சென்று வர முடியாமல், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தனியார் கார்களில் திருத்தணி கோவில் செல்ல குறைந்தது 2,400 ரூபாய் செலவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி