கருப்பு நிறத்தில் குடிநீர் சப்ளை புழுதிவாக்கத்தில் அதிர்ச்சி
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, ராமலிங்கா நகர் பிரதான சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக பள்ளம் தோண்டியபோது, அங்கு புதைக்கப்பட்டிருந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் குழாய்கள் சேதமடைந்தன. இதனால், குடிநீருடன் கழிவுநீரும் கலந்தது.இந்நிலையில் நேற்று காலை, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கருப்பு நிறத்தில், துர்நாற்றத்துடன் வந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.பொதுமக்கள் கூறியதாவது:கடந்த 12 ஆண்டுக்கு முன் சென்னை குடிநீர் வாரியத்தால், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வினியோக திட்டம் துவக்கப்பட்டது.இந்தப் பணிக்காக தெருக்களில் பதிக்கப்பட்ட குழாய்கள், பல இடங்களில் சேதமடைந்துள்ளன.இதனால், அடிக்கடி குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது வாடிக்கையாகிவிட்டது. அதேபோன்ற சம்பவம், மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்டுள்ளது.குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், பழைய குழாய்களை முற்றிலுமாக நீக்கி, புதிதாக பொருத்தினால் மட்டுமே, இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.