தமிழ் மருத்துவ மரபுகள் பயிலரங்கம் துவக்க விழா
பெரும்பாக்கம்,தமிழ் மருத்துவ மரபுகள் எனும் மூன்றாமாண்டு பயிலரங்கத்தின் துவக்க விழா, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், நேற்று நடந்தது.இதில், நிறுவன துணை தலைவர் சுதா சேஷய்யன் பேசியதாவது:கடந்த 17ம் நுாற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்வரை, தமிழ் மருத்துவம்தான் புழக்கத்தில் இருந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், முதலில் அலோபதி மருத்துவமனை துவக்கப்பட்டபோது, தமிழ் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுக்கும் வகையில், அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர், கீழ்ப்பாக்கத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை வழங்கினார். அதுதான் இன்றைய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை.அதன்பின், பல அறிஞர்கள் தமிழ் மருத்துவத்தை காக்க போராடினர். தொடர்ச்சியாக தமிழ் மருத்துவத்தின் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் சந்திரசேகரன், தேசிய சித்த மருத்துவ இயக்குநர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ் மரபு சார்ந்த சிறப்பு கருப்பொருளுடன், 38 அமர்வுகளில், துறை சார்ந்த மருத்துவர்கள் இப்பயிலரங்கில் பயிற்சி அளிக்கின்றனர்.