சென்னை, சர்வதேச கண் டாக்டர்கள் மாநாடு, கிண்டியில் நேற்று நடந்தது. 'இந்திய இன்ட்ராகுலர் இம்ப்ளான்ட் மற்றும் ரிப்ராக்டிவ் சொசைட்டி' என்ற ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ., சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 25 நாடுகளை சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.மாநாட்டில், கண் மருத்துவ பிரீமியர் லீக், ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ., திரைப்பட விழா விருதுகள், சிறந்த கண் டாக்டர்களுக்கு வழங்கப்பட்டன.மாநாட்டை துவக்கி வைத்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:பார்வை திறனை ஒருவர் முறையாக பராமரிக்கவில்லை என்றால், அவரது வாழ்க்கை தரம், சமூக பங்கேற்பு உள்ளிட்டவை நேரடியாக பாதிக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், 'டிஜிட்டல்' பயன்பாடு அதிகரிப்பால், மக்களிடையே கண் தொடர்பான பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.அதேநேரம், கண் மருத்துவ தொழில்நுட்பமும் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. மாநாட்டில் பல்வேறு கண் நிபுணர்கள் பங்கேற்பது, சிகிச்சை தொடர்பான தீர்வுக்கு பல்வேறு வகையில் உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ., அமைப்பின் செயலர் டாக்டர் அமர் அகர்வால் பேசுகையில், “கண் மருத்துவ சிகிச்சை துறையில், புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை, அனைத்து டாக்டர்களிடமும் கொண்டு செல்வது தான், மாநாட்டின் நோக்கம். ''கண் மருத்துவ சிகிச்சை துறையில், இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மாநாடு உதவும்,” என்றார்.