சென்னை, கே.கே.நகர், அசோக் நகர் சாலைகளில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அம்மா உணவகங்கள், மின் பெட்டிகள், கழிப்பறைகளை அகற்றக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு:கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்களை அமைத்தல் மற்றும் மரங்கள் நடுதல் ஆகியவை சாலையின் இடத்தைக் குறைத்தாலும், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சீராக செல்ல, மீதமுள்ள சாலையின் அகலம் போதுமானதாக இருந்தது.கடந்த 2000ம் ஆண்டுக்குப் பின், அப்பகுதியில் உள்ள நடைபாதைகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அம்மா உணவகங்கள், பொது கழிப்பறைகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.சட்ட விரோதமாக இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன; பழுதுபார்ப்பு கடைகளும் உள்ளன. சாலையோர வியாபாரிகளும் ஆங்காங்கே கடைகளை வைத்துள்ளனர். பொது இடங்களில் உள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவ - மாணவியர், பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. சைக்கிளில் செல்பவர்களுக்கான பிரத்யேக சைக்கிள் பாதைகளும் சுருங்கியுள்ளன. இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொது சாலை, நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் கட்டப்பட்ட பொது கழிப்பறைகள், அம்மா உணவகங்கள், மின் பெட்டிகளை அகற்றி, வேறு இடங்களுக்கு மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய முதல் பெஞ்ச், மனுதாரர் எழுப்பிய பிரச்னை மிக முக்கியமானது. எனவே, இரண்டு வாரங்களுக்குள் மாநகராட்சி பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.