துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டில், ஒக்கியம் துரைப்பாக்கம், பிள்ளையார்கோவில் தெரு, ராயல் அவென்யூ, வி.ஜி.பி., அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது.இங்குள்ள பெரும்பாலான வடிகால்களில், தங்கும் விடுதி, கல்வி நிறுவனங்கள், ஐ.டி., மற்றும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்படுகிறது.நிர்வாக குளறுபடியால் வடிகால் பணி முழுமை பெறவில்லை. இணைப்பு இல்லாமல், ஆங்காங்கே துண்டாக விட்டுள்ளதால் நீரோட்டம் தடைபட்டு, சாலை மற்றும் வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டம் வரும் வரை, கழிவுநீரை தேக்கி லாரியில் வெளியேற்ற வேண்டும். ஆனால், பெரும்பாலான கட்டடங்களில் உள்ள கழிவுநீர், பழைய வடிகாலில் விடப்பட்டது. முன்பு பிரச்னை தெரியவில்லை.புதிய வடிகால் கட்டும் ஒப்பந்த நிறுவனம், பணியை முடிக்காமல் இழுத்தடிப்பதால், தெருக்கள் முழுதும் கழிவுநீராக மாறியது. சாலையில் நடக்க முடியவில்லை. மாணவ - மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால், சுவாச பிரச்னை ஏற்படுகிறது.மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.