உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சை போதையில் ஓட்டி விபத்து பயணியர் சீட்டில் பதுங்கிய ஓட்டுனர்

பஸ்சை போதையில் ஓட்டி விபத்து பயணியர் சீட்டில் பதுங்கிய ஓட்டுனர்

துரைப்பாக்கம், திருவான்மியூரில் இருந்து நேற்று காலை 7:00 மணிக்கு புறப்பட்ட '95 எக்ஸ்' மாநகர பேருந்து, 15 பயணியருடன் கிளாம்பாக்கம் சென்று கொண்டிருந்தது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், 40, என்பவர், பேருந்தை ஓட்டிச் சென்றார்.ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி அடுத்த ஒய்.எம்.சி.ஏ., பேருந்து நிறுத்தம் அருகில் சென்றபோது, மெட்ரோ ரயில் பணிக்காக சாலையோரம் வைக்கப்பட்ட இரும்பு தடுப்பில் மோதி, பேருந்து விபத்தில் சிக்கியது. பயத்தில் பயணியர் அலறினர்; விபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. பேருந்து நின்றதும், ஓட்டுனர் சரவணன் எழுந்து சென்று, பயணியர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். தாறுமாறாக பேருந்து ஓட்டியது குறித்து, ஓட்டுனர் சரவணனிடம் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பினர்.அப்போது, போதையில் அவர் பேருந்து ஓட்டி வந்தது தெரிந்து, சில பயணியர் அவரை தாக்கினர். 14 ஆண்டில் முதல் முறையாக மது குடித்து, பேருந்து இயக்கிவிட்டதாக, அவர்களிடம் சரவணன் கெஞ்சிக் கொண்டிருந்தார்.அப்போது, ரோந்து போலீசார் அங்கு வந்தனர். 'நல்ல வேளையாக பெரிய விபத்து ஏற்படவில்லை. ஓட்டுனர்கள் மது அருந்தவில்லை என, பணிமனை அலுவலர்கள் உறுதி செய்த பின், அவர்களிடம் பேருந்தை இயக்க ஒப்படைக்க வேண்டும்' என, பயணியர் கூறினர். போதையில் இருந்த ஓட்டுனர் சரவணனை, பயணியரிடம் இருந்து மீட்டு, போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.போலீசார் சரவணனை கைது செய்தனர். இதற்கிடையே, ஓட்டுனர் சரவணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக, எம்.டி.சி., தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை