| ADDED : ஜூலை 15, 2024 01:40 AM
கோவிலம்பாக்கம்:கீழ்கட்டளையில், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நடுவே, ரேடியல் சாலை அமைக்கப்பட்டதால், இரண்டாக பிரிந்து காணப்படுகிறது.கீழ்கட்டளை ஏரியின் உபரிநீர், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் கலப்பதற்காக, 3 கி.மீ., துாரத்திற்கு போக்கு கால்வாய் உள்ளது. அதன் இருபக்க பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டன.இது குறித்தும் நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. அதன் நடவடிக்கையாக, போக்கு கால்வாயின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இருபக்கமும் சிமென்ட் கரை அமைக்கப்பட்டது.தற்போது, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளைச் சேர்ந்தோர், போக்கு கால்வாயில் கழிவுநீரை விடுகின்றனர். இதனால், கால்வாய் முழுதும் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கால்வாயில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து, பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதில், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.பருவமழை துவங்கினால், போக்குவரத்து கால்வாயில் மழைநீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட துறையினர், போக்கு கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும். ஆகாயத்தாமரை செடிகளை முழுதாக அகற்றி பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.