ஆவடி, திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 24; ரவுடி. இவர், நேற்று முன்தினம் இரவு, திருமுல்லைவாயில், புதிய அண்ணா நகரில், உடல்நிலை பாதிக்கப்பட்ட நண்பனின் தாயை பார்க்க, நண்பர்களான கார்த்திகேயன், வினோத் ஆகியோருடன் சென்றார்.அங்கு, சதாசிவம், 31, என்பவரின் வீட்டு வாசலில் நின்று, கணேசன் நண்பர்களுடன் சத்தமாக பேசி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதை, சதாசிவம் கண்டித்துள்ளார். உடனே மூவரும், சதாசிவத்தை கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்து பைக்கில் சென்றனர். ஆத்திரமடைந்த சதாசிவம், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான, செல்வம், 40, வேலு, 36, பாலகிருஷ்ணன், 65, பீட்டர், 44, மற்றும் அன்பழகன், 37, ஆகியோருடன், இருசக்கர வாகனத்தில், கணேசனை பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர்.தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், சதாசிவம், செல்வம், வேலு, பாலகிருஷ்ணன், கணேசனின் நண்பர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்; வினோத்தை தேடி வருகின்றனர். காயமடைந்த பீட்டர் மற்றும் அன்பழகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.