பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாததால், ஒரு நாள் பெய்த மழைக்கு மடிப்பாக்கம், ராஜலட்சுமி நகர் தனித்தீவாக மாறியது. அங்கு வசிக்கும், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வெளியே வர முடியாமல் இரண்டு நாட்களுக்கும் மேலாக தவித்து வருகின்றனர்.சென்னை, மடிப்பாக்கம், ராஜலட்சுமிநகர், பிரதான சாலைகள், குறுக்கு தெருக்கள் என 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அங்கு, 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முதல் பிரதான சாலையில் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. அதில், தினசரி உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், அதே சாலையில் அந்த வார்டுக்கான குடிநீர் வாரிய அலுவலகமும் அமைந்துள்ளது. அச்சாலையில் ஓராண்டிற்கு மேலாக மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. அதுவும் அரைகுறையாக ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ராஜலட்சுமிநகரில் சாலைகள் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, 'மேன்-ஹோல்', குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் முன், குடிநீர் வாரிய திட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அத்தெருவில் வசிக்கும் மக்கள் வந்து, செல்வதற்கு ஏற்ற வகையில் பாதை அமைத்து, பணிகள் துவக்க ஆலோசனை வழங்க வேண்டும்.ஆனால், ஒரு முறை கூட குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து பார்ப்பதில்லை. ஒப்பந்ததாரர்கள் தங்களின் இஷ்டத்திற்கு பள்ளம் தோண்டி, தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால், சமீபத்தில் பெய்த ஒரு நாள் மழை காரணமாக பல நகர்களில் சாலைகள் சகதியாக மாறியுள்ளன. அதில் குறிப்பாக ராஜலட்சுமி நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில தெருக்களில் சாலை முழுதும் உள்வாங்கியது. குடியிருப்பு வாசிகள் நடந்து செல்லவே முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.ராஜலட்சுமிநகரில் இருந்து அம்பேத்கர் சாலையை அடைய மூன்று வழித்தடம் உள்ளது. 4வது, 6வது தெரு மற்றும் அரை கி.மீ., துாரம் சுற்றி செல்லும் மகாலட்சுமிநகர் பிரதான தெரு. இதில், 4,5,6வது தெருக்களின் சாலையில் பள்ளம் உள்வாங்கியதால் முழுமையாக மூடப்பட்டது.மகாலட்சுநகர் பிரதான சாலையிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், இருசக்கர வாகனம் செல்ல மட்டுமே வழி உள்ளது. இதனால், ராஜலட்சுமி நகருக்கு ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கடந்த சில நாட்களாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பால், பேப்பர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருவதும் நின்று போனதாக, புகார்கள் எழுந்துள்ளன.மக்கள் நடந்து சென்றாலே வழுக்கி விடும் நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் வழுக்கி விழுந்து, ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பிய அவலமும் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நகர் தனித்தீவாக மாறியுள்ளது.இவ்வளவு பிரச்னை இருந்தும் அரசியல்வாதிகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என, அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
* பொதுமக்கள் பேட்டி
மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பணி நடந்த பல பகுதிகளில், மழைக்காலத்தில் இதே நிலை இருந்தது. முதல்வர் கூட வந்து பார்வையிட்டார். பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கும்போதே, சாலையில் தோண்டிய பள்ளத்தை முறையான மண்போட்டு மூடி, அதன் மீது மணல் போட்டு, ஜல்லி கொட்டியிருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. பள்ளத்தில் இருந்து எடுத்த களிமண்ணை சாலை முழுதும் பரப்பி விட்டனர். மேலும், அனைத்து இடத்திலும் தோண்டி விட்டனர். இது தான், மகாலட்சுமிநகர் தனித்தீவானதற்கு முழு காரணம். தற்போது வெளியே செல்ல வழியின்றி இந்நகர்வாசிகள் தவிக்கிறோம்.-எஸ்.லட்சுமிபதி,50, ஐ.டி., ஊழியர், மகாலட்சுமிநகர்------------பாதாள சாக்கடை திட்ட பணி நடக்கும் போது, எந்த குடிநீர் வாரிய அதிகாரிகளும் நேரில் வந்து மேற்பார்வை செய்வதும் இல்லை. இதுபோன்று திடீர் மழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதும் இல்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கால், 800 குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறோம். பலர் வேலைக்கு செல்லவில்லை. முதியோர் உடல் நலத்திற்கு நடைபயிற்சி கூட மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில், மக்கள் நலனில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை.- ஆர்.மணிகண்டன்,48, தனியார் நிறுவன ஊழியர், மகாலட்சுமிநகர்-- நமது நிருபர் --