கே.கே., நகர்:கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர், 136வது வார்டில், விஜயராகவபுரம் உள்ளது. இங்குள்ள ஐந்தாவது தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2021ல் பெய்த மழையில், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிந்ததும், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியது.மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்பு காரணமாக, மீண்டும் கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இரு நாட்களாக, இப்பகுதியில் மீண்டும் கழிவுநீர் தேங்கி வருகிறது. கே.கே., நகர் காமராஜர் சாலையிலுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, கே.கே., நகரில் பல இடங்களில், இதேபோல் கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்குகிறது.விஜயராகவபுரம், ஐந்தாவது தெருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முதலாவது தெரு வழியாக, ராஜமன்னார் சாலை சென்று, அங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. விஜயராகவபுரம் முதலாவது தெருவில், 650 வீடுகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், விஜயராகவபுரம் ஐந்தாவது தெருவில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாவது தெரு பள்ளம் என்பதாலும், குடியிருப்பில் இருந்து கழிவுநீரை மின் மோட்டார் வாயிலாக 'பம்பிங்' செய்யும் போது, இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சில மீட்டர் துாரத்தில், ராஜமன்னார் சாலை செல்கிறது.எனவே, இந்த குடியிருப்பின் கழிவுநீர் இணைப்பை, ராஜமன்னார் சாலையில் செல்லும் பாதாள சாக்கடையில் இணைத்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:காமராஜர் சாலையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் ஏற்பட்ட பழுது சீர் செய்யப்பட்டது. விஜயராகவபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீரை பம்பிங் செய்யக் கூடாது என, அக்குடியிருப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளோம். தற்போது, விஜயராகவபுரத்தில் கழிவுநீர் தேங்கும் பிரச்னையையும் சீர் செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.