| ADDED : ஜூன் 28, 2024 12:25 AM
சென்னை, 'வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரைவில் பல்வேறு பணிகள் துவங்கவுள்ளது,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:வடசென்னை வளர்ச்சிக்காக 4,000 கோடி ரூபாயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகள் வாயிலாக நடக்கும் பணிகளை, சிறப்பு திட்ட செயலாக்க துறை ஒருங்கிணைத்து வருகிறது.அதன்படி, வடசென்னையில் மின்சார துறை வாயிலாக, மேல்நிலை மின் பாதைகளை, 628 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்திற்கடியில் மாற்றும் திட்டம், விரைவில் துவங்கவுள்ளது.ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில், 416 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,2,600 வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.கொளத்துார் அரசு புறநகர் மருத்துவமனையில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் தளங்கள் கட்டப்படவுள்ளன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. இதை தீர்ப்பதற்கான வேலைகளில் செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம், 5,000 பேருக்கு பட்டாக்கள் வழங்க இருக்கிறோம்.இவ்வாறு உதயநிதி பேசினார்.