பிரதான சாலையில் வாகனங்கள் பார்க்கிங் திருமங்கலம் மெட்ரோ அருகே அத்துமீறல்
திருமங்கலம், மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் அத்துமீறி, பிரதான சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் இருந்து, மெட்ரோ ரயிலில் தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையத்தில், வாகனங்கள் நிறுத்துவதில் இடநெருக்கடி இருந்தது. இதனால், மெட்ரோ ரயிலில் பயணிக்க வரும் பயணியரின் வாகனங்கள், இரண்டாவது அவென்யூவில் வரிசையாக நிறுத்தி 'பார்க்கிங்'காக பயன்படுத்தினர்.இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, நேற்று முன்தினம் கூடுதலாக வாகனங்கள் நிறுத்தும் வசதியை, மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தியது.இருப்பினும், நேற்று வழக்கம் போல், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தன. பொதுவாகவே, திருமங்கலம் - அண்ணா ரவுண்டனா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், 40 அடி கொண்ட இச்சாலையில், இரு வரிசையில் 'பைக்'குகள் நிறுத்தப்படுவதால், கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது.இந்த ஆக்கிரமிப்பு வாகனங்கள் குறித்து மெட்ரோ நிர்வாகம், போலீஸ், மாநகராட்சி என யாரிடம் கேட்டாலும், முறையான பதில் கிடைக்கவில்லை. அங்குள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வருவோரும், மெட்ரோ நுழைவாயிலில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, விதிமீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் கேட்ட போது,'அண்ணா நகரில் மாநகராட்சியின் கட்டண 'பார்க்கிங்' கடந்த சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள் மெட்ரோ பயணியரின் வாகனங்கள் தான். அத்துமீறி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து, அப்புறப்படுத்தி வருகிறோம்' என்றனர்.திருமங்கலத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும், திருமங்கலம் மெட்ரோவுக்கும் சம்பந்தமில்லை. மாநகராட்சி தான் இதை கவனிக்க வேண்டும்.
இதுகுறித்து, திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் கேட்ட போது,'அண்ணா நகரில் மாநகராட்சியின் கட்டண 'பார்க்கிங்' கடந்த சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள் மெட்ரோ பயணியரின் வாகனங்கள் தான். அத்துமீறி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து, அப்புறப்படுத்தி வருகிறோம்' என்றனர்.
-மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்