உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரத்தில் குடிநீர் கசிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல! இரு துறைகள் கைவிரிப்பு

மாதவரத்தில் குடிநீர் கசிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல! இரு துறைகள் கைவிரிப்பு

சென்னை:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக, சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்களுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், வடக்கு உள்வட்ட சாலையை அடைவதற்கு, மாதவரம் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன.இந்த சாலை 6 கி.மீ., நீளம் உடையது. 'மிக்ஜாம்' புயல் மழை வெள்ளத்தில் மாதவரம் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்தது. இதை சீரமைப்பதற்கு 3 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.இந்த நிதியில் பிப்., மாதம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. இன்னும் பணிகள் முடியவில்லை. ஒப்பந்த நிறுவனம் அவ்வப்போது வருவதும், பழைய சாலையை தோண்டுவதுமாக, காலத்தை கடத்தி வருகிறது.இதற்கிடையே, ஆங்காங்கே புதிதாக போடப்பட்ட சாலையில், சென்னைக்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால், புதிதாக போடப்பட்ட சாலை, முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அங்கு சாலையை புதுப்பிக்க முடியாது என, ஒப்பந்த நிறுவனம் கறாராக கூறிவிட்டது.இந்நிலையில், கிராண்ட்லைன் மாரியம்மன் கோவில் அருகில், ஒரு வாரத்திற்கு முன் சாலையில் குடிநீர் கசிவு ஏற்பட்டது.இதை, குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளம் தோண்டி சரிபார்த்து மூடிவிட்டு சென்றனர். மீண்டும் கசிவு ஏற்பட்டு, சாலையில் பள்ளம் உருவானது. இதில், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.நெடுஞ்சாலைத் துறையின் தொடர் அழுத்தம் காரணமாக, மீண்டும் பள்ளம் தோண்டி, குடிநீர் வாரியத்தினர் சரிபார்த்தனர்.அப்போது, மற்றொரு குழாயில் இருந்து குடிநீர் கசிவது தெரிந்தது. அந்த குழாய், கிராண்ட்லைன் ஊராட்சி குடிநீர் குழாய் என்பதால், அதை சரிசெய்யாமல், குடிநீர் வாரியத்தினர் பள்ளத்தை மூடிவிட்டு சென்றனர்.தற்போது வரை குடிநீர் கசிவு சரி செய்யப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாதவரம் நெடுஞ்சாலை வழியாக, 40 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது. அதற்காக, நிலத்திற்கடியில் அமைக்கப்பட்ட குழாய், அதிக பயன்பாடு இல்லாமல் இருந்தது.கோடையில், மீண்டும் அதிகளவில் அழுத்தம் கொடுத்து குடிநீர் எடுத்து செல்லப்பட்டதால், குழாயில் கசிவு அதிகரித்துள்ளது; சாலையும் சேதமாகி வருகிறது.இதனால், சாலை அமைக்கும் பணியை முடிக்க முடியவில்லை. புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்ததாக, குடிநீர் வாரிய பொறியாளர்கள் சொல்கின்றனர்.ஆனால், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. மாதவரம் நெடுஞ்சாலை சீரமைப்பு பெரும் தலைவலியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்