உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.சி.ஆரில் அகற்றியவற்றுக்கு மாற்றாக புதிதாக நட்ட மரங்களின் நிலை என்ன? தீர்ப்பாயம் கேள்வி

இ.சி.ஆரில் அகற்றியவற்றுக்கு மாற்றாக புதிதாக நட்ட மரங்களின் நிலை என்ன? தீர்ப்பாயம் கேள்வி

சென்னை:இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், நான்கில் இருந்து ஆறுவழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, நீலாங்கரை முதல் அக்கரை வரை, சாலையோரங்களில் வாகை, அசோகா, பாதாம், உதயம், வேம்பு உள்ளிட்ட மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக, நம் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.மரங்களை வெட்டி அகற்றாமல், மாற்று இடத்தில் நட வேண்டும். ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு மாற்றாக வேறொரு இடத்தில் 10 மரங்கள் நட வேண்டும் என உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்தின்போது வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு மாற்றாக 10 மரங்களை நட வேண்டும் என, பசுமை குழு பரிந்துரை செய்துள்ளது.அதன்படி புதிதாக மரக்கன்றுகளை நட, ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தை தேர்வு செய்துள்ளதாக, நெடுஞ்சாலை துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அங்கு சில மரங்கள் நடப்பட்டுள்ளதாக, புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.நடப்பட்ட மரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து கூடுதல் அறிக்கை, படங்களை நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்ய வேண்டும்.மரங்களை நடுவதற்கு தேவையான பணம் முழுமையாக வனத்துறைக்கு செலுத்தப்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவ., 4ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை