பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வளர்புரம் ஊராட்சி தலைவரும், பா.ஜ., பட்டியல் அணி பிரிவு மாநில பொருளாளருமான சங்கர், கடந்தாண்டு ஏப்., 27ல், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதுார், கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சாந்தகுமார்,30, உள்ளிட்ட 7 பேரை, நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் ஜாமினில் வந்த சாந்தகுமார், செவ்வாப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில், கடந்த 13ம் தேதி, வழக்கு விசாரணைக்காக நசரத்பேட்டை ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார், சாந்தகுமாரை கைது செய்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சாந்தகுமார் இறந்தார்.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீஸ் தாக்கியதால் சாந்தகுமார் இறந்ததாகக் கூறி, உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சாந்தகுமார் மனைவி விஜயலட்சுமி, பூந்தமல்லி உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.அதில், சாந்தகுமாரை போலீசார் செவ்வாப்பேட்டையில் கைது செய்தது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை, வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.