சென்னை, அண்ணா நகர் 2வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ், 47, சரளா, 39; தம்பதியர். இவர்கள் மூன்று பிள்ளைகளுடன், 'டிரான்ஸ்பார்மர்' கீழ் ஆபத்தான முறையில், நடைபாதையில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். அந்த இடத்தில் வேலி அமைக்க இருப்பதால், காலி செய்யும் படி வற்புறுத்துவதால் மாற்றிடம் இன்றி தவிக்கின்றனர்.இதுகுறித்து, சரளா கூறியதாவது:திருமங்கலம் கூவம் கரையோரத்தில் உள்ள, நியூ காலனியில் வசித்து வந்தோம். அங்கு இளம் வயதிலேயே சிறார்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகி, திருட்டு போன்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.அதுபோல எங்களின் குழந்தைகள் மாறி விடக்கூடாது; அவர்களை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என, அரும்பாக்கம் நடுவன்கரையில், 10,000 ரூபாய் முன்பணம், 3,000 ரூபாய் வாடகையில் குடியேறினோம். என் கணவர் கூலி வேலை செய்கிறார். அவருக்கு, தினமும் 200 ரூபாய் தான் வருமானம் கிடைக்கும். கொரோனா காலத்தில், அந்த வருமானமும் இல்லாமல், வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், அங்கிருந்து எங்கு செல்வது என தெரியாமல், நடைபாதையில் குடியேறினோம்.எங்களுக்கு நிரந்தர குடியிருப்பு இல்லாததால், ரேஷன் கார்டு இல்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே உள்ளது. ரேஷன் கார்டு பதிவு செய்தால், இருப்பிடத்திற்கான சான்று கேட்கின்றனர். ரேஷன் அரிசியை வாங்கி சாப்பிட கூட முடியவில்லை.எங்களது நிலை குறித்து, கவுன்சிலர், எம்.எல்.ஏ.,விடம் கூற, பலமுறை அவர்கள் வீட்டிற்கு சென்றோம். ஒருமுறை கூட எங்களை சந்திக்க விடவில்லை.தற்போது, 'டிரான்ஸ்பார்மர்' சுற்றி வேலி அமைக்க போகிறோம். நீங்கள் காலி செய்ய வேண்டும் என்கின்றனர்.கோயம்பேடு பகுதியில், எனது மூன்று பிள்ளைகளையும் தொடர்ந்து படிக்க வைத்து வருகிறோம்.மீண்டும் வாடகை வீட்டிற்கு செல்ல 15,000 ரூபாய் முன்பணம் கேட்கின்றனர். அவ்வளவு பெரிய தொகை இல்லாமல் தவித்து வருகிறோம். ரேஷன் கார்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் எங்களுக்கு வீடு ஒதுக்கி தந்தால், வாழ்க்கை மேம்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.