மேலும் செய்திகள்
தொழிற்சாலையில் மயங்கி விழுந்த ஊழியர் பலி
10-Sep-2024
சென்னை, வேலைக்கு வந்த முதல் நாளிலே, பணியின்போது மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலியானார். மற்றொரு சம்பவத்தில் கோல்கட்டா நபர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 35; கட்டட தொழிலாளி. இவர், நேற்று காலை சேலத்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.இவரை, மேஸ்திரி முனியப்பன் என்பவர் பெரம்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். மதியம் 1:00 மணியளவில், பெரம்பூர் ஜமாலியான ஹைதர் கார்டன் தெருவில் உள்ள ஒரு இடத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டும் பணியில், பாக்யராஜ் ஈடுபட்டார்.பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால், மோட்டார் வாயிலாக அகற்றினர். அப்போது மோட்டார் ஒயர் மேல் தண்ணீர் பட்டு மின்சாரம் பாய்ந்ததில், பாக்யராஜ் பள்ளத்திலேயே மயங்கி விழுந்தார். சக தொழிலாளர் குமார், பாக்யராஜை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். மற்றொரு சம்பவம்
மாதவரம், பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகர் அருகே உள்ள சுடுகாட்டில், 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட தகன எரிமேடை அமைக்கும் பணியில், நேற்று முன்தினம் மாலை கோல்கட்டாவைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.அங்கு, இரும்பு சாரம் கட்டும் பணியில் அபில் அலி, 55, என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரும்புக்கம்பி அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. அபில் அலியுடன் வேலை பார்த்த சுஜான் சர்தார், 19, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.மாதவரம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
10-Sep-2024