உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., நிர்வாகி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

தி.மு.க., நிர்வாகி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

மறைமலை நகர்;சிங்கபெருமாள் கோவிலில், தி.மு.க., நிர்வாகி வீட்டில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 120 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிங்கபெருமாள் கோவில், பாரதியார் தெருவைச் சேர்ந்த ஜெயகோபால் என்பவரது மனைவி யமுனா பாய், 63. இவருக்கு சதீஷ், ரத்தீஷ் என, இரு மகன்கள் உள்ளனர். இருவரும், கே.ஆர்.சி., என்ற பெயரில், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதில் ரத்தீஷ், தி.மு.க., இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராக உள்ளார். யமுனா பாய் பழைய வீட்டில் வசித்து வரும் நிலையில், மகன்கள் இருவருக்கும் திருமணமாகி, அதே வளாகத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தொடர் திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் யமுனா பாய், மகன் ரத்தீஷ் வீட்டில் இருந்த, 120 சவரன் நகைகளை தன் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டி விட்டு, சதீஷ் வீட்டிற்குச் சென்று துாங்கியுள்ளார். நேற்று காலை 7:00 மணியளவில் வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. திருடு போன நகைகளின் மதிப்பு 85 லட்சம் ரூபாய். மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, நான்கு தனிப்படைகள் அமைத்து, கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்தும் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை