கொடுங்கையூரில் 2 எரி உலைகள் அமைக்க திட்டம் ரூ.1,248 கோடி! குப்பையிலிருந்து மின்சாரம், காஸ் தயாரிக்க முடிவு
சென்னையில் குப்பை தேக்கத்தை தடுக்கும் வகையில், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், 1,248 கோடி ரூபாய் மதிப்பில், எரி உலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, தினமும் 42 மெகா வாட் மின்சாரம், 80 கிலோ வாகன பயன்பாட்டிற்கான காஸ் தயாரிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில் தினமும், 62 லட்சம் கிலோ திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும், வடசென்னை பகுதியில் கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும், தென்சென்னை பகுதியில் பெருங்குடி குப்பை கிடங்கிலும் கொட்டப்பட்டு வருகின்றன.கடந்த 40 ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பால் அப்பகுதியில் வசிப்போர் நுரையீரல், சுவாச பாதிப்பு உள்ளிட்டவற்றாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கு தீர்வு காண பெருங்குடியில், 225 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி, 85 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள், இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 252 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள குப்பையையும், பயோ மைனிங் முறையில் அகற்ற, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.'கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கு நிலங்கள் மீட்கப்பட்டு, அங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்நிலையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் வாகன பயன்பாட்டிற்கான காஸ் தயாரிக்கும் இரண்டு எரி உலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 1,248 கோடி ரூபாய் மதிப்பில் இந்த எரி உலைகள் அமைக்கப்படுகின்றன.'இதற்கு முதற்கட்டமாக கட்டடம், சுற்றுச்சுவர், எரி உலைகள் போன்றவற்றிற்கு, 848 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் கட்ட எரி உலைகள், 400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்' என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.சக்தி மணிகண்டன் கூறியதாவது:முதற்கட்ட எரி உலைகள் அமைக்க, பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், 848 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அடுத்தகட்ட பணிகள், 400 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.ஒவ்வொரு எரி உலைகளிலும் தலா, 21 மெகாவாட் மின்சாரம், 40 கிலோ காஸ் என, 42 மெகாவாட் மின்சாரமும், 80 கிலோ காஸ் தயாரிக்கப்படும்.அதேபோல், பெருங்குடி குப்பைக் கிடங்கில் எரி உலைகள் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் விரைந்து முடிக்கப்படும். எரி உலைகள் செயல்பாட்டிற்கு வந்தால், சென்னையில் குப்பை தேக்கம் இருக்காது. அதன்படி, மட்கும் குப்பையில் உரமும், மறு சுழற்சிக்கு உகந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பொருட்களும் தயாரிக்கப்படும். மற்ற குப்பை, எரி உலையில் கொட்டப்பட்டு மின்சாரம் மற்றும் வாகன பயன்பாட்டிற்கான காஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
எரி உலை ஆபத்து
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:குப்பை தரம் பிரிக்கப்படாமல், அப்படியே கொட்டி எரிப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். எரி உலையில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, பார்டிக்குலேட் மேட்டர் என்ற நுண் துகள் ஆகியவற்றை மனிதர்கள் தொடர்ந்து சுவாசித்தால், பல்வேறு விதமான உடல் பாதிப்பை ஏற்படுத்தும்.மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளான, 'டையாக்சின், பியூரான்' சேர்மங்கள் காற்றில் மட்டுமல்லாமல், நிலத்தடி நீரில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.எரி உலைகளில் இருந்து கிடைக்கும் 30 சதவீத சாம்பலில், நச்சு வாயுக்களின் டையாக்சின், ஈயம், காட்மியம், பாதரசம், நுண்துகள்கள் உள்ளன. இவையும், அபாய குப்பையாக மாறும். இவற்றை குப்பை மேடுகளில் கொட்டினாலும், கட்டுமானத்திற்கு பயன்படுத்தினாலும் தொடர்ந்து நச்சு உமிழும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -