தி.நகரில் விதிமீறி கட்டிய 13 கட்டடங்களுக்கு சீல்
தி.நகர்: தி.நகரில் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக, ஏழு வீடுகள், ஆறு கடைகள் என, 13 கட்டடங்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர். கோடம்பாக்கம் மண்டலம், 134வது வார்டில், தி.நகர் தம்பையா சாலை உள்ளது. இச்சாலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் விதிமீறல் கட்டடங்கள் இருப்பதாக, மாநகராட்சிக்கு புகார் எழுந்தது. ஆய்வு செய்ததில், இத்தெருவில் சில குடியிருப்புகள், அனுமதித்த இடத்தை விட கூடுதல் பரப்பளவில் கட்டியதும், காலியாக விட வேண்டிய இடத்தையும் ஆக்கிரமித்து இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியும் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, நேற்று சம்பந்தப்பட்ட ஏழு வீடுகள் மற்றும் ஆறு கடைகள் என, 13 கட்டடங்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.