மின் இணைப்பிற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது
வாலாஜாபாத், கேரளாவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30. இவர், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடில் வாங்கியுள்ள மனையில் வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின் இணைப்பு வழங்கக் கோரி, வாலாஜாபாத் ஊரக பிரிவு மின்வாரிய அலுவலகத்தை அணுகினார்.அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் ஜெயரவிகுமார், 48, 'மின்வாரிய உதவி பொறியாளர் பூபாலனிடம், 5,000 ரூபாய் கொடுத்தால், உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.இது குறித்து, மணிகண்டன், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற மணிகண்டன், மேற்கண்ட இருவரும் பணத்தை வாங்கினர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், பூபாலன் மற்றும் ஜெயரவிகுமாரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரிக்கின்றனர்.