லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பூதேரிபண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நட்ராஜன். இவர், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தங்கை மகள் செல்வியின் திருமணத்திற்கு, 'மூவலுார் ராமாமிர்தம் அம்மாள் திருமண திட்ட'த்தில் உதவித்தொகை கேட்டு, 2008ல் விண்ணப்பித்தார்.இதற்கு, ஊரக நல அலுவலர் சிவகாமி, 67, என்பவரை அணுகியபோது, 'மனு மீது நடவடிக்கை எடுக்க, 1,000 ரூபாய் தர வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2008 டிச., 19ம் தேதி, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது சிவகாமியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.