நடைபாதை ஆக்கிரமிப்பால் வெடித்த தகராறு கார் ஓட்டுனரை தீர்த்துக்கட்டிய 3 பேர் கைது
சென்னை, சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா, 35; கால் டாக்சி ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு 9:21 மணியளவில், தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை - பாரதியார் தெரு சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டி விட்டு, தப்ப முயன்றனர்.அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உதவி ஆய்வாளர் மணிகண்டன், அந்த கும்பலை பிடிக்க முயன்றார். அதற்குள், கத்தியை காட்டி மிரட்டி கும்பல் தப்பியது.இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளிகளை பின்தொடர்ந்தனர்.இதில், கொலையாளிகள் தரமணியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தேனாம்பேட்டையைச் சேர்ந்த பழைய குற்றவாளி மணி, 25, கந்தன்சாவடி ராகுல், 31, நந்தனம் விக்னேஷ், 31, ஆகிய மூவரை கைது செய்தனர். 'திடுக்' தகவல்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:முக்கிய குற்றவாளியான மணி, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை நடைபாதையில் தர்ப்பூசணி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் விஜய் என்பவர் பணிபுரிகிறார்.அவரை சம்பவத்தன்று காலை 10:00 மணியளவில், கார் ஓட்டுனர் ராஜாவும் அவரது நண்பரான ராஜேந்திரனும் சேர்ந்து, போக வர முடியாமல் கடை போட்டுள்ளதை தட்டிக்கேட்டு தாக்கி உள்ளனர். இது குறித்து, விஜய் கடை உரிமையாளரான மணியிடம் தெரிவித்துள்ளார்.மதியம், 1:00 மணியளவில் ராஜாவை பார்த்த மணி, 'எதற்காக விஜயை அடித்தீர்கள்' எனக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பானது. அதன் தொடர்ச்சியாகவே, மணி அவரது நண்பர்களான ராகுல், விக்னேஷ், ஆகியோருடன் சேர்ந்து, ராஜாவை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.