தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் 47 தமிழக வீரர்கள் பங்கேற்பு
சென்னை;இமாச்சல பிரதேசத்தில் இன்று துவங்கும் தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில், 10 பெண்கள் உட்பட, 47 தமிழக கிக் பாக்சர்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். 'வாக்கோ இந்தியா' கிக் பாக்ஸ் கூட்டமைப்பு சார்பில், தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, இமாச்சல பிரதேசத்தில் இன்று துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில், 10 பெண்கள் உட்பட 47 வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, தலைமை பயிற்சியாளரும், சங்கத்தின் பொதுச் செயலருமான சுரேஷ்பாபு கூறுகையில், ''கடந்த மே மாதம் நடந்த மாநில போட்டியில் தங்கம் வென்ற 47 பேர், தேசிய போட்டியில் பங்கேற்றுள்ளனர். ''தேசிய போட்டியிலும் தங்கம் வென்று, ஆசிய போட்டிக்கு தேர்வாகி, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம்,'' என்றார்.