| ADDED : நவ 23, 2025 04:34 AM
சென்னை, நவ. 23- கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், கைவிடப்பட்ட ஒன்பது மாத பெண் குழந்தையை, ரயில்வே பாதுகாப்பு படையினர் மீ ட்டனர். சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று அதிகாலை 5:20 மணிக்கு, ஒரு தகவல் வந்தது. அதில், கேரளா மாநிலம், ஆலப்புழாவில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருக்கும் விரைவு ரயிலில், எஸ் - 7 பெட்டியில், ஒன்பது மாத பெண் குழந்தை, பெற்றோர் இல்லா மல் தனியாக இருப்பதாக, பயணி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், அந்த ரயில் சென்ட்ரல் நிலையத்தை அதிகாலை 5:30 மணிக்கு வந்தடைந்தவுடன், குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்தனர். பின், குழந்தையை சென்ட்ரல் குழந்தை பாதுகாப்பு உதவி மையத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை ரயிலில் தனியாக விட்டுச் சென்ற பெற்றோர் குறித்து, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.