பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை ஆக்ரோஷத்துடன் முட்டி தள்ளிய எருமை பதைபதைக்க வைத்த சம்பவம்
பம்மல், அனகாபுத்துாரில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை, சாலையில் வந்த எருமை மாடு ஆக்ரோஷத்துடன் முட்டித் தள்ளிய சம்பவம், பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பம்மல் அடுத்த அனகாபுத்துாரைச் சேர்ந்தவர் அஸ்வினி, 12. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன், மாணவர்கள் அனைவரும் வெளியே வந்தனர். அஸ்வினி சாலையை கடக்க நின்றிருந்தார். அப்போது, வேகமாக ஓடிவந்த எருமை, ஆக்ரோஷமாக அஸ்வினியை முட்டி கீழே தள்ளியது. இதை பார்த்த, அங்கிருந்தோர் பதைபதைத்து போயினர். எருமையை அங்கிருந்து விரட்டி சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கன்றுக்குட்டியை பைக்கின் பின்புறம் வைத்து, அந்த எருமையை ஒருவர் ஓட்டி வருவது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்நபரை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னையில், கால் நடைகளால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது, நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள்; பின் கண்டுகொள்வதில்லை. இதுவே, தொடர் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றன. சாலையில் மாடுகள் திரிந்தால், அதன் உரிமையாளர்கள் மட்டுமின்றி அப்பகுதி பொறுப்பில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.