உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் நிலையம் முன் தீக்குளித்த பட்டறை தொழிலாளி உயிரிழப்பு அவசரமாக வழக்கு பதிந்து ஒருவர் கைது

காவல் நிலையம் முன் தீக்குளித்த பட்டறை தொழிலாளி உயிரிழப்பு அவசரமாக வழக்கு பதிந்து ஒருவர் கைது

ஆர்.கே.நகர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன், நேற்று முன் தினம் இரவு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பட்டறை தொழிலாளி ராஜன் என்பவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன், 42. இவர் கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரில் ஸ்டீல் பட்டறை நடத்தி வந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் பட்டறையை மூடினார். பின், கொருக்குப்பேட்டை, அன்பழகன் தெருவில் உள்ள முருகன், 46, என்பவரது பட்டறையில், மூன்று நாட்களாக வேலை செய்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில், ராஜனுக்கும் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்த கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாதவன், 46, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்டீல் பட்டறை உரிமையாளர் முருகன், இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.மன உளைச்சலில் இருந்த ராஜன், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில், கொருக்குப்பேட்டை, அண்ணா நகர், வேலன் சத்திரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தார். அப்போது, அங்கு வந்த மாதவனுக்கும், ராஜனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு மது குடிக்க வந்த அருண்குமார் என்பவர், மாதவனுடன் சேர்ந்து ராஜனை தாக்கி உள்ளனர். இதனால் விரக்தியடைந்த ராஜன், பிற்பகல் 3:45 மணியளவில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வந்து, தன்னை மாதவன் மற்றும் அருண்குமார் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாய்மொழி புகார் அளித்துள்ளார்.அதை பதிவு செய்யாமல், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டன், புகாராக எழுதித்தரும்படி கூறியுள்ளார். போதையில் இருந்த ராஜன், கோபத்துடன் திரும்பியுள்ளார். பின், இரவு 9:15 மணியளவில், ஆட்டோவில் மீண்டும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது தான் எடுத்து வந்த 5 லி., பெட்ரோலை உடலில் ஊற்றி, சிகரெட் லைட்டரால் தனக்குத்தானே தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த ராஜனை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன்பின் ராஜன் புகார் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், கொருக்குப்பேட்டை, சி.பி.சாலை, ரயில்வே காலனியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருண்குமார், 26, என்பவரை கைது செய்தனர்.தலைமறைவான கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாதவனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜன் உயிரிழந்தார். அவநம்பிக்கைமக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி இருப்பதே, இதுபோன்ற துயர சம்பங்கள் அரங்கேற காரணமாக அமைந்துள்ளது. ஒரு சில காவலர்களால், ஒட்டுமொத்த காவல்துறை மீதும், மக்கள் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. - தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்.

போலீசார் தான் பொறுப்பு

உறவினர்கள் குற்றச்சாட்டுதீக்குளித்து இறந்த ராஜனின் உறவினர்கள் கூறியதாவது:கடந்த டிச., 24ம் தேதி ராஜன், கொருக்குப்பேட்டை மதுபான கடையில் சரக்கு வாங்கி கொண்டு, கடை எதிரில் உள்ள தெருவில் நின்று மது அருந்தி உள்ளார். அப்போது, சாதரண உடையில் வந்தவர், தன்னை போலீஸ் எனக்கூறி வீடியோ எடுத்துள்ளார். பொது இடத்தில் மது குடித்ததாக கூறி, 3,000 ரூபாய் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால், ராஜனை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். பின், இது குறித்து விபரம் அறிந்து உறவினர்கள் சென்று, ராஜனை வீட்டிற்கு அழைத்துவந்தோம்.மறுநாள் சீருடை அணிந்த ஆர்.கே.நகர் போலீசார், ராஜன் வேலை செய்யும் பட்டறைக்கு சென்று, அங்கு அவரை அசிங்கப்படுத்தி உள்ளனர். தன்னிடம் பணம் வசூலிக்க முடியாததால், தன்னை போலீசார் அவமானப்படுத்துவதாக ராஜன் வேதனைப்பட்டார். 'குடிப்பது தப்பு என்றால், மதுபான கடைகளை ஏன் திறந்து வைத்தீர்கள்?' என போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். 'என் மீது தப்பு இல்லை' எனக்கூறி, போலீசாரை எச்சரிக்கும் விதமாக தீக்குளக்கப்போவதாக ராஜன் கூறியுள்ளார். அவர் சொல்வதை கேட்ட போலீசார், மேலும் கடுஞ்சொல் கூறி சிரித்தனர். இதன் பின், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று அபராத தொகை செலுத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.வேலை செய்யும் பட்டறையில் போலீசார் வந்து எச்சரித்ததால், சுற்றுப்புறத்தவர்களின் அவச் சொல்லுக்கு ஆளான ராஜன், பட்டறையையே மூடிவிட்டார். மூன்று நாளுக்கு பின் வேறொரு பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பிரச்னை ஏற்பட்டு போலீஸ் நிலையம் சென்ற போதும், மீண்டும் தன்னை அவமானப்படுத்துவதாக கருதி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். போலீசார் அவர் புகார் கொடுக்கும்போது, புகாரை வாங்கியிருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுக்குடித்தால்

கெடுபிடி வசூல்டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடத்தில் துர்நாற்றம் வீசுவதாலும், அங்கு தண்ணீர் முதல் நொறுக்கு தீனி வரை அதிக விலையில் விற்பதாலும், சில கடைகளில் மதுக்கூடங்கள் இல்லாததாலும், திறந்த வெளியில் மது அருந்துவது தொடர்கிறது.இதே போல, திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் மண்டபங்கள் அருகில், மது பரிமாறி குடிப்பதும் நடக்கிறது. இது போன்ற சமயங்களில் ரோந்து போலீசாரிடம் சிக்குவோரிடம், கடும் வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்தவித ரசீதும் இல்லாமல், மூவாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிப்பதாகவும், மறுப்போரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று உட்கார வைப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால், போலீசார் தரப்பில், பொது இடங்களில் மதுக்குடிப்போர் குறித்து வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேலிடத்தில் இருந்து நெருக்கடி தருவதாக கூறுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பள்ளி, கோவில்கள் அருகில் மற்றும் ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் மது குடித்து ரகளையில் ஈடுபடுவோர் குறித்து, அவசர போலீஸ் உதவி எண்: 100க்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம். போலீசார் 'சிட்டி போலீஸ் ஆக்ட்' எனும் சென்னை நகரக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.இச்சட்டத்தின் கீழ், பொது இடங்களில் மது குடிப்போருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனையும், 1,000 ரூபாய்க்கு மேல் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால், பல இடங்களில் போலீசார், சட்டப்படி நடவடிக்கையில் ஈடுபடாமல், அவர்களின் பின்னணி அறிந்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை