உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி ஜே.சி.பி.,யால் மீட்கும்போது தலை துண்டானது

பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி ஜே.சி.பி.,யால் மீட்கும்போது தலை துண்டானது

தாம்பரம்:கிழக்கு தாம்பரத்தில், பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில், மண் சரிந்து சிக்கிய தொழிலாளியை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தோண்டிய போது, தலை துண்டாகி இறந்தார். தாம்பரம் மாநகராட்சியில், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்தாவது மண்டலம், கிழக்கு தாம்பரம், ஆதி நகர் பகுதியில், வி.வி.வி., என்ற நிறுவனம், இப்பணியை செய்து வருகிறது.நேற்று காலை, ஆதி நகர், காமராஜ் தெருவில், திட்டக்குடியை சேர்ந்த முருகானந்தம், 27, தென்காசியை சேர்ந்த சண்முக சுந்தரம், 49 ஆகிய இரண்டு ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியோடு, சாலையில் நீளமாக, 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி.,யை விஜய் என்பவர் ஓட்டினார். மாலை 3:40 மணிக்கு, பள்ளத்தில் இறங்கி, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.அப்போது, சண்முக சுந்தரம் சுதாரித்து மேலே ஏறினார். ஆனால், முருகானந்தம் மண் சரிவில் சிக்கிக்கொண்டார். பின், அவரை காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. முழுவதுமாக மண் சரிந்து விட்டதால், காப்பாற்றும் எண்ணத்தில், ஜே.சி.பி., இயந்திரத்தால் மண்ணை அள்ள முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக முருகானந்தத்தின் தலை துண்டாகி, தலை மட்டும் வெளியே வந்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அலறினர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தினர். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மேற்பார்வையில், ஜே.சி.பி., மூலம் மண் அள்ளப்பட்டது. மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மண்ணில் சிக்கிய முருகானந்தத்தின் தலையில்லா உடலை மீட்டனர். பின், தலை, உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மண் சரிந்து, தொழிலாளி உள்ளே சிக்கிக்கொண்டது தெரிந்தவுடன், உடனடியாக போலீஸ், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், ஜே.சி.பி., மூலம் காப்பாற்ற முயன்றதே முருகானந்தத்தின் தலை துண்டானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, சண்முக சுந்தரம், விஜய் ஆகிய இருவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

அலட்சியம்

பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெறும் இடங்களில், மண் சரிவு போன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதை எதிர்கொள்ள போதிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். அதேபோல், பணி நடக்கும் இடத்தில், மாநகராட்சி பொறியியல் பிரிவினர் ஆய்வு செய்து, முறைப்படி நடக்கிறதா; பாதுகாப்பு சாதனங்கள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆனால், அவற்றை கடைப்பிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் மண்ணில் சிக்கியவுடன், போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம். போலீசார் விரைந்து, உயிருடனோ அல்லது இறந்த உடலையோ பாதுகாப்பாக மீட்டிருப்பர். அரசு எடுக்கப்போகும் நடவடிக்கையை பொறுத்தே, இதுபோன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் தடுக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை