செயின் பறிக்க முயன்றவருக்கு தர்ம அடி
கொரட்டூர்: கொரட்டூர், கிழக்கு நிழற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 57. அம்பத்துார் தொழிற்பேட்டையில், நடத்தி வருகிறார். இவரது மனைவி சுதா, 51. நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டின் கீழ்தளத்தை சுத்தம் செய்யும் பணியில், சுதாவின் தம்பி விஜயகுமார், 49, மற்றும் பணியாட்களுடன், ஆறு முகம் ஈடுபட்டிருந்தார். அப்போது, முதல் தளத்தில் உள்ள வீட்டினுள் இருந்த சுதா, அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்தார். வெளியே நின்றிருந்த நபர், சுதாவை கீழே தள்ளி, அவர் வைத்திருந்த கத்தியை காட்டி, கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை கொடுக்கும்படி மிரட்டியுள்ளார். சுதா கூச்சலிடவே, அங்கு வந்த அவரது கணவர் ஆறுமுகம், விஜயகுமார் மற்றும் பணியாட்கள், அந்த நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து, கொரட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருமுல்லைவாயல், நியூ அண்ணா நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன், 29, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.