மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் பலி
பம்மல்: பம்மல், எல்.ஐ.சி., காலனி, 3வது குறுக்கு தெரு, பாபா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நரேஷ்குமார், 32; ஏசி மெக்கானிக். இவரது மனைவி தானுப்பிரியா. தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன் தானுப்பிரியா, மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நரேஷ்குமார் மட்டும் தனியாக இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், மதுரையில் இருந்து கணவருக்கு தானுப்பிரியா போன் செய்தார்.போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், நரேஷ்குமாரின் சகோதரர் சரவணனிடம், வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். சரவணன் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது; கதவு திறக்கப்படவில்லை.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, நரேஷ்குமார் குளியலறையில் மின்சாரம் பாய்ந்து, நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.