உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு

மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு

மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மணலியில் 200 ஏக்கரிலான விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். விளைநிலங்கள் 'பிளாட்'டுகளாக மாறுவதை தடுக்க, முறையான மழைநீர் வடிகால்வாய் வசதியை, மாநகராட்சி செய்து தர வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மணலி மண்டலம், 16, 17 ஆகிய வார்டுகளில் உள்ள ஆண்டார்குப்பம், காமராஜர் நகர், கன்னியம்மன் பேட்டை, அரியலுார், விச்சூர், கடப்பாக்கம் போன்ற பகுதிகளில், 200 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்து வருகிறது. கடப்பாக்கம் ஏரி நீர் பாசனமே இவற்றுக்கு முக்கிய நீராதாரம். இப்பகுதியில், வாழையே பிரதான விவசாயம். 'பாபட்லா' நெல், குறைந்த கால பயறு வகைகளான, அரை கீரை, சிறு கீரை, பொன்னாங்கண்ணி உள்ளிட்ட கீரை வகைகளும் பயிரிடப்படும். சீசன் பழங்களான, கிர்ணி, முலாம் பழம், தர்பூசணி உள்ளிட்ட பழங்களும், ஜன., - பிப்., மாதங்களில் பயிடப்படும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பலவகை பயிர் விவசாயம் நடந்த நிலையில், 2015ம் ஆண்டு பெருவெள்ளம், மணலி விவசாயிகளை கலங்கடித்தது. வெள்ள நீருடன் கலந்து வந்த எண்ணெய் கழிவுகளால், விவசாய நிலங்களில் மண்ணின் தன்மை மாறியது. தொடர்ந்து, 2017, 2019, 2023 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பாதிப்பால், விவசாய நிலங்களில், 3 - 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி, பயிர் அழுகி போவது தொடர்கதையாக இருந்தது. விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர், வாய்க்கால் வழியாக பொன்னேரி நெடுஞ்சாலையை கடந்து, கொசஸ்தலை ஆற்றில் கலப்பது போல் கட்டமைப்பு இருந்தது. நாளடைவில் குடியிருப்புகள் பெருக்கம், தொழிற்சாலைகள் வருகை உள்ளிட்டவற்றால், வாய்க்கால் துார்ந்து, தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால் விளை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு, கட்டட இடிபாடுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன; லாரி நிறுத்தங்களாகவும் மாறிவிட்டன. மேலும், வீடுகள் மற்றும் சாலை மட்டத்தை மட்டும் கணக்கிட்டு, மழைநீர் வடிகால்வாய்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, விவசாய நிலங்கள் தாழ்வாகிவிட்டன. வெள்ளக்காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கலாகி, பயிர் அழுகி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மணலியில், விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், விளைநிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற, முறையான வடிகால்வாய் வசதி அமைத்து தர வேண்டும். வெள்ளநீருடன் எண்ணெய் கழிவுகள் கலந்து, விளை நிலங்களை நாசப்படுத்துவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சாதகமான சூழல் இல்லை

விளை நிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற, முறையான வடிகால்வாய் வசதி கிடையாது. இதனால், வெள்ளப் பாதிப்பின் போது, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தவிர பெரு நிறுவனங்கள், பல லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து விளை நிலங்களை வாங்கி வருவதால், விவசாயம் செய்வதற்கான சாதகமான சூழல் இல்லை. இதனாலே விளை நிலங்கள், லாரிகள் நிறுத்துமிடங்களாகவும், கன்டெய்னர் முனையங்களாகவும் மாறி வருகின்றன. இதை தடுக்க, பொன்னேரி நெடுஞ்சாலை - ஆண்டார்குப்பம் சந்திப்பு, துவாரகா நகர் வழியாக பெரிய வடிகால்வாய் அமைத்து கொசஸ்தலை ஆறுக்கு வெள்ள நீரை கடத்தினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். - கே.தங்கசிவம், 60, விவசாயி, கன்னியம்மன்பேட்டை, மணலி

நஷ்டம் அடைகிறோம்

சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி என்பதால், பல ஆண்டுகளுக்கு முன், சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மணலியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், கீரை, வாழை பொருட்கள் விற்பனையாகி வந்தன. தற்போது, விவசாயத்திற்கான சாதகமான சூழல் இல்லை. இங்கு விளையும் வாழை இலைகள் இப்பகுதிக்கே போதுமானதாக இல்லை. அதனால், வெளியில் இருந்து இறக்குமதி செய்தும், நஷ்டம் அடைகிறோம். - வி.வெங்கடேசன், 40, வாழை இலை வியாபாரி, மணலி. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை