அ.ம.மு.க., பிரமுகர் கொலையில் ஒடிஷாவில் பதுங்கியவர் கைது
நொளம்பூர்: நொளம்பூரில், அ.ம.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை, ஒடிஷா மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், கோவிலுாரை சேர்ந்தவர் ஜெகன், 45; அ.ம.மு.க., பிரமுகர். தன் அண்ணன் மகன் மதனை கொலை செய்த, அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷை, 2021ல் வெட்டி கொலை செய்தார். பின், ஜாமினில் வெளியே வந்த ஜெகன், சென்னைக்கு வந்து, நொளம்பூர், ரெட்டிப்பாளையம் பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், 2023 டிசம்பரில், ஜெகனை, அவரது மீன் கடை வாசலில் வைத்து, மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. நொளம்பூர் போலீசார் விசாரித்து, ஜெகனை வெட்டிக் கொன்ற ஏழு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், சிங்கப்பூர் குமார் என்பவர் ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர், சிங்கப்பூரில் இருந்து ஒடிஷா வழியாக தமிழகம் வர முயன்றவரை, நொளம்பூர் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார், ஒடிஷா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையத்தில் வைத்து, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார், விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று அவரை சிறையில் அடைத்தனர்.