ஏர்போர்ட்டில் முடங்கிய வைபை அடுத்த மாதத்தில் சரியாகுமாம்
சென்னை, சென்னை விமான நிலையத்தில், 'வைபை' சேவை, ஆறு மாதமாக முடங்கியுள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், இலவச வைபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. பயணியர் இந்த சேவையை, 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். இதில், உள்நாடு மற்றும் சர்வதேச பயணியர் அடங்குவர். விமான நிலையத்தில், 'வைபை' சேவை கிடைக்காதது, பயணியருக்கு தலைவலியாக உள்ளது.'டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் வைபை சேவை கிடைக்கும்' என, அதிகாரிகள் கூறி வந்தனர். ஆறு மாதங்களாகவே, வைபை சேவையை பயன்படுத்த முடியாமல், பயணியர் திணறி வருகின்றனர்.ஆத்திரமடைந்த பயணியர் பலர், சென்னை விமான நிலையத்தை பற்றி சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக கருத்து பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலைய முனையங்களில், வைபை சேவை வழங்க, தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. இந்த ஒப்பந்தம், ஆறு மாதங்களுக்கு முன் முடிந்து விட்டது.தற்போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், தனியார் நிறுவனம் ஒன்றும் புதிதாக ஒப்பந்த ஆணையை பெற்றுள்ளன. ஜூன் இறுதிக்குள் வைபை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இதற்கான கட்டமைப்பை சர்வதேச முனையங்களில் ஏற்படுத்த உள்ளோம். பயணியர் போர்டிங் பாஸ் விபரத்தை உள்ளீடு செய்து, 500 எம்.பி., டேட்டாவை, 45 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.