சென்னை, முகப்பேரில் நடந்து வரும், அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டியில் தனிநபர் இறுதிப் போட்டிக்கு, தமிழக வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆதரவில், எம்.எம்., டென்னிஸ் அகாடமி சார்பில், செல்லதுரை நினைவுக்கான அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டி, சென்னை, மேற்கு முகப்பேரில் உள்ள அகாடமி வளாகத்தில் நடக்கிறது.இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 90க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். ஆண்களுக்கான இப்போட்டிகள், தனிநபர் மற்றும் இரட்டையருக்கு தனித்தனியாக நடக்கின்றன.நேற்று, தனிநபர் போட்டியின் முதல் அரையிறுதியில், தமிழக வீரர் சித்தார்த் ஆர்யா மற்றும் தெலுங்கானா வீரர் ஷிட்தேஷ் எலமான்சிலி ஆகியோர் மோதினர்.அதில், 6 - 2, 6 - 1 என்ற கணக்கில், தமிழக வீரர் சித்தார்த் ஆர்யா வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில், தமிழக வீரர் தீரஜ் சீனிவாசன் மற்றும் கர்நாடகாவின் ரஷ்ஷின் சாமுவேல் ஆகியோருக்கு இடையிலான ஆட்டம், மூன்று மணி நேரம் பலப்பரீட்சையில் முடிந்தது. முடிவில், 2 - 6, 6 - 2, 7 - 5 என்ற கணக்கில், தமிழக வீரர் தீரஜ் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று மாலை, 3:00 மணிக்கு, இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.