உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு டாக்டர்கள் பணி புறக்கணிப்பே காரணம் என குற்றச்சாட்டு

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு டாக்டர்கள் பணி புறக்கணிப்பே காரணம் என குற்றச்சாட்டு

சென்னை, சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை டாக்டரை நோயாளியின் உறவினர் கத்தியால் குத்திய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அந்த மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் நேற்று உயிரிழந்தார். டாக்டர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி, வாலிபரின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பித்தப்பையில் கல்

சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 33. கடந்த 13ம் தேதி இரவு, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, 9:18 மணியளவில் உயிரிழந்தார்.இரண்டு நாட்களுக்கு முன், சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அதே மருத்துவமனை டாக்டர் பாலாஜியை, நோயாளி ஒருவரின் மகன், கத்தியால் குத்தினார். பலத்த காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விக்னேஷ் உயிரிழப்புக்கு டாக்டர்கள் பணியில் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும் தான் காரணம் என, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். பின், அவரது உடலை பெற மறுத்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, விக்னேஷின் சகோதரர் பார்த்திபன் கூறியதாவது:இரண்டு நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்றோம். அங்கு பரிசோதனையில், பித்தப்பையில் கல் இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்து, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.

குடிப்பழக்கம்

இங்கே வந்ததில் இருந்து, டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கும், டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால், முறையான சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர்கள் யாராவது பணியில் இருந்திருந்தால், விக்னேஷை காப்பாற்றி இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, மருத்து வமனை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:விக்னேஷ் மருத்துவமனையில் உள்நோயாளியாக, 13ம் தேதி இரவு 11:25 மணியளவில் கடும் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டார். இதற்குமுன், தனியார் மருத்துவமனையில், கணையம் முழுதும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று, அங்கு பணம் செலுத்த முடியாமல், இங்கு அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு குடிப்பழக்கத்தால் கணையம், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தைராய்டு சுரப்பி பிரச்னையும் இருந்தது. அவரது உடல்நிலை குறித்து, விக்னேஷின் தந்தை, மனைவி, சகோதரன், சகோதரி ஆகியோரிடம் தெளிவாக டாக்டர்கள் விளக்கி, ஒப்புதல் பெற்றுள்ளனர். நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் பெற்று, வாய் வழியாக செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இன்று காலை 9:18 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நீண்டநேர பேச்சுக்குப் பின், நேற்று பிற்பகலில் விக்னேஷின் உடலை, அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.காப்பாற்றி இருக்கலாம்மருத்துவமனைக்கு விக்னேஷ் நன்றாக நடந்து வந்தார். நேற்று இரவுகூட என்னிடம் மொபைல் போனில் நன்றாக பேசினார். திடீரென அவர் இறந்து விட்டதாக காலையில் கூறுகின்றனர். இந்த மருத்துவமனையில், டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்ததால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றோம். ஆனால், எங்களை அனுப்பவில்லை. அனுப்பியிருந்தால், என் கணவர் உயிரோடு இருந்திருப்பார்.- வி.பரிமளம், விக்னேஷின் மனைவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி