ராயப்பேட்டையில் தரமற்ற சாலை ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், தரமில்லாமல் தார் சாலை அமைத்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டையில், பீட்டர்ஸ் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள மேம்பாலம் அணுகு சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, புதிதாக தார் சாலை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, கடந்த வாரம் அணுகு சாலை மில்லிங் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 50 மீட்டர் நீளத்திற்கு, புதிதாக தார் சாலை போடப்பட்டது. நேற்று காலை போடப்பட்ட சாலையில், தற்போது கற்கள் பெயர்ந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. விபத்து ஏற்படும் முன், சாலையை மறுசீரமைக்க வேண்டும் என்றும், இதுபோல் தரமில்லாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.