உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்ரூத் - 2.0 திட்டத்தில் புதுப்பொலிவு பெறுது மணலி ஏரி பக்கவாட்டு சுவரை பலப்படுத்த வெட்டிவேர்

அம்ரூத் - 2.0 திட்டத்தில் புதுப்பொலிவு பெறுது மணலி ஏரி பக்கவாட்டு சுவரை பலப்படுத்த வெட்டிவேர்

மணலி, மத்திய அரசின், 'அம்ரூத் 2.0' திட்டத்தில், 4.73 கோடி ரூபாயில் மணலி ஏரி புனரமைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் பக்கவாட்டு சுவர் அமைப்பை பலப்படுத்தும் வகையில், வெட்டிவேர் செடிகள் பதிப்புதற்கான கட்டமைப்பு அமைக்கப்பட்டு வகிறது. சென்னை மாநகராட்சி, 20 வது வார்டில் மணலி ஏரி உள்ளது. 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 4.73 கோடி ரூபாய் செலவில், ஏரியை புனரமைக்கும் பணி, 2023 ஆகஸ்டில் துவங்கியது. அதன்படி, ஏரி 0.5 மீட்டர் ஆழப்படுத்தல், 4 மீட்டர் கரை உயர்த்துதல், 5,900 அடிக்கு கரைகள் பலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. பிரமாண்டமான, 29 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஏரியில், 10 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி, உபரிநீர் காமராஜர் சாலைக்கு மறுபுறம் உள்ள மாத்துார் ஏரிக்கு மடைமாற்றமாகும் வகையில், பிரதான ஏரிகளுக்கு அமைப்பது போல், பாதாள நீர்வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்கவாட்டு சுவர் மண் சரியாத படியாக, வெட்டிவேர் செடிகள் நடவு செய்வதற்காக, 'ஜியோ லைனிங்' எனும் செயற்கை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 60 சதவீதமான பணிகள் முடிந்துள்ள நிலையில், ஏரி பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த பணிகள், செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். முழுமையான பணிகளுக்கு பின், ஏரியில் தேங்கும் மழைநீரால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வில் இருக்கும். மேலும், ஏரியை சுற்றிலும், பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான சிறப்பம்சங்கள் இடம் பெறுவதால், மணலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !