நேப்பியர் பாலத்தில் அனமார்பிக் ஓவியங்கள்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடந்து வருகின்றன. இதையொட்டி, காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ள வரையாடு பொம்மை. நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' என்ற தொழில்நுட்பத்தில், துாரத்தில் முழுமையாகவும், அருகில் சிதைந்தும் தெரியும் வகையிலான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.சென்னை : சென்னை நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' கலையை பயன்படுத்தி, விளையாட்டு வீரர்களின் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, நடப்பாண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், செப்., 10 முதல் நடந்து வருகின்றன. பல்வேறு நகரங்களில், வரும் 24ம்தேதி வரை நடக்கவுள்ளது.இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' முறையில், விளையாட்டு ஓவியங்களை வரைந்து, அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அனமார்பிக் கலை, 15ம் நுாற்றாண்டில் இருந்தே உள்ளது.இந்த கலையை பயன்படுத்தி, நேப்பியர் பாலத்தின் அரை சக்கர வடிவிலான துாண்களில், கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம், குத்துசண்டை, ஓட்ட பந்தயம், கபடி, பேட்மின்டன், டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. துாரத்தில் இருந்து பார்க்கும்போது, இந்த படங்கள் முழுமையாக தெரிகின்றன. அருகே வரும்போது ஓவியங்கள் சிதைந்துள்ளது போன்று தெரிகின்றன.மேம்பாலத்தின் மையப்பகுதியில், முதல்வர் கோப்பைக்கான லோகோவாக, நீலகிரி வரையாடு சிலை வைக்கப்பட்டுள்ளது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, குதிரை சிலை பயன்படுத்தப்பட்டது. அப்போது, நேப்பியர் பாலத்தில், செஸ் போர்டு ஓவியம் வரையப்பட்டது.தற்போது, அதை அழித்துவிட்டு, சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம், அனமார்பிக் ஓவியங்களை வரைந்து வருகிறது.இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் ஓவியர் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக, 30 ஓவியர்கள் இணைந்து நேப்பியர் பாலத்திற்கு வண்ணம் தீட்டி, அனமார்பிக் முறையில் ஓவியங்களை வரைந்து வருகிறோம். ராணுவ விமான சாகச நிகழ்ச்சியால் பணிகள் தடைப்பட்டன. இப்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.இரவில், போக்குவரத்தை நிறுத்தி நேப்பியர் பாலம் சாலையில் ஓவியங்களை வரைய திட்டமிட்டுள்ளோம். மழை பெய்யாத பட்சத்தில், இரண்டு நாட்களில் பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.