உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரங்கநாதர் தரிசனம் அளித்த அஞ்சனா

 ரங்கநாதர் தரிசனம் அளித்த அஞ்சனா

ரங்கநாதனை தரிசிக்க வேண்டுமென்றால் ஏழு வாசல் கதவுகளை கடக்க வேண்டும். 'ரங்கபுர விஹா' என்ற பாடலில், ஏழு வாசல்களை கடந்து பெருமாளை தரிசிக்கும் யோகத்தை ஏற்படுத்தினார், நாட்டிய கலைஞர் அஞ்சனா ரமேஷ். பக்தர்களை யானை ஆசீர்வாதம் செய்வது, சன்னிதிகளில் வீற்றிருக்கும் தெய்வங்கள், வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்கள், பூஜை செய்வது என, ஒவ்வொரு வாசலில் இருப்போர் குறித்தும் தன் நடனத்தில் காட்சிப்படுத்திய அஞ்சனா, கடைசியில் ரங்கநாதனாகவே நின்றது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியின் மைய உருப்படியாக, டி.ஆர்.சுப்ரமண்யம் இயற்றிய அமிர்கல்யாணி ராக வர்ணத்தில், திருச்செந்துார் முருகனை வர்ணித்தார். முருகன் தோன்றியது, சூரனை அழிக்க பார்வதியிடம் வேல் வாங்கியது, அதை கொண்டு மரத்தை பிளந்து ஒரு பகுதியை மயிலாகவும், மறுபகுதியை சேவலாகவும் ஏற்றதை உருவகப்படுத்தி, அடவுகளில் அற்புதமாக விளக்கினார். 'இவ்வளவு புகழ்பெற்ற இறைவனே உன் அருள் வேண்டும். அறுபடை கொண்டவனே, உன்னை இதய கமல மலரால் பூஜித்துக்கொண்டே இருப்பேன்' என, சாஹித்ய வரிகள் வர்ணத்தை அழகுபடுத்தின. பின், கதகளியில் பயன்படுத்தப்படும் ஒரு பதத்தை எடுத்தாண்டு, பரதத்தில் திரவுபதி - கிருஷ்ணரின் தோழமையை வெளிப்படுத்தினார். ஐந்து கணவர்களை பெற்றிருந்தும் சபையில் கவுரவர்களால் புடவை துயில் உருவ, நிர்க்கதியாக நிற்கிறாள் திரவுபதி. இதை பார்க்கும்போது, எத்தனை பெரிய பாவச்செயல் இது என்பதை, தன் கண்களில் அஞ்சனா காட்டியதும், அதை பார்த்து ரசிகர்கள் உணர்ந்ததும், கண்கலங்க செய்தது. சபையில் தோன்றிய கிருஷ்ணர் அவளை காப்பாற்றுகிறார். தொடர்ந்து, 'எனக்கு பெற்றோர் இருக்கின்றனறோ இல்லையோ, உற்ற தோழனாக நீயிருக்கிறாயே' என கண்ணீர் மல்க, கிருஷ்ணரை நினைத்து ஆசுவாசப்படுத்தி கொண்டார். இதை லகுவாக சஞ்சாரி ஆக்கினார். இந்த இடத்தில், ஸ்ரீவித் நட்டுவாங்கம், மிதுன் குரலிசை, ராஜேஷ் மிருதங்கம், ஈஸ்வர் வயலின் சசிதர் புல்லாங்குழல் ஆகியோரின் பக்க இசை, மிக கச்சிதமாக அமைந்தது. இறுதியில், காலபைரவ அஷ்டகம் எனும் எட்டு பத்தி உடைய பாடலை நிகழ்த்தினார். முதலில் காலபைரவரின் தோற்றத்தையும், அவர் தாங்கியுள்ளவற்றையும் குறிப்பிட்டு நடனமாடிய அஞ்சனா, முடிவில் காசியில் வீற்றிருப்பவன், கர்மம் நீக்குபவன், அஷ்டமா சித்தியை வழங்குபவன் என, கால பைரவனின் செயலை காட்டி, நாரத கான சபாவில் தன் கச்சேரியை நிறைவு செய்தார். - மா.அன்புக்கரசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ