ஆண்டவர் கோவிலில் அன்னபூரணி தரிசனம்
வடபழனி, வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி மூன்றாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன. சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது.நவராத்திரி விசேஷமாக கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 'சக்தி' கொலு, தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, கதைகளாக கொலு பொம்மைகள் பிரதிபலிக்கின்றன.திருமண வைபவம், வளைகாப்பு, பழங்கால கடைகள், கிராமத்து சூழல், சுவாமி வீதி உலா, திருக்கயிலாயம், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரம், கல்விச்சாலை, சீதா கல்யாணம் உள்ளிட்டவை நேர்த்தியாக அமைந்துள்ளன.'சக்தி' கொலுவில், நேற்று மாலை அம்பாள் அன்னபூரணி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை லலிதா மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது.அதைத்தொடர்ந்து, மாலை சுபானு குழுவினரின் யோகா சிவதாண்டவம் நடந்தது. இரவு லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் பக்தி பாடல்கள் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு திருமுறை பாராயணம் நடக்கிறது.
நீங்களும் வழங்கலாம்!
அம்மனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறக்கோரி, 'சக்தி' கொலுவில் பக்தர்களும் தங்கள் வசதிக்கேற்ப பொம்மைகள் வாங்கி கொடுத்து, அம்பாளின் அருளை பெறலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.