| ADDED : ஜன 14, 2024 12:27 AM
சென்னை, சென்னை, ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பரோட்டா கடையில் அமர்ந்திருந்த நபரை, ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியது.அப்பகுதியில் ஒரு அறையில் பதுங்கிய அவரை, சரமாரியாக வெட்டிக்கொன்றது. ஐஸ் ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், புளியந்தோப்பு, சிவராஜ் புரத்தைச் சேர்ந்த மாதவன், 52, என தெரிந்தது.இவர் மீது, பேசின் பாலம் காவல் நிலையத்தில் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.மேலும், கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி, கூட்டாளி ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவருடன், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு உணவருந்த வந்தனர். அப்போது, ஒரு கும்பல் ஆற்காடு சுரேஷை வெட்டிக்கொன்றது.தடுக்க வந்த மாதவனுக்கும் வெட்டு விழுந்தது. ஆற்காடு சுரேஷ் கொலையில், அ.தி.மு.க., பிரமுகர்கள் ஜோகன் கென்னடி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மாதவன், ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தனக்கு பழக்கமான ஒருவருடைய பரோட்டா கடைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.வழக்கம்போல நேற்று வந்தபோது மாதவனை மர்ம கும்பல் தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது.இதனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு, மாதவன் சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.