சென்னை: இந்திய தடகள சங்கம் மற்றும் சென்னை தடகள சங்கம் இணைந்து, வீராங்கனைக்கான கேலோ இந்தியாவின் 'அஸ்மிதா தடகளம் லீக்' போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. ஒரு நாள் மட்டுமே நடந்த இப்போட்டியில், 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இருபிரிவினர் பங்கேற்றனர். இதில், 14 வயது பிரிவில், டிரையத்லான் ஏ, பி, சி ஆகிய மூன்று பிரிவுகளில், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், கிட்ஸ் ஜாவாலின் எனும் 5 மீ., ஓட்டப் போட்டிகள் நடந்தன. அதேபோல், 16 வயதில், 60, 600 மீட்டர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, 200 சிறுமியர் பங்கேற்றனர். போட்டியில், 14 வயது பிரிவில், டிரையத்லானில் அனைத்து விளையாட்டிலும் பங்கேற்று, புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்கள் வழங்கப்பட்டன. அதன்படி, டிரையத்லான் 'சி' பிரிவில், அரணி சனா, 13; மாயா பாரதி, 13; கிஷ்ணிதா, 14; ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 'ஏ' பிரிவில், பிரதிஷ்கா, 12; அபினயா வர்ஷினி, 12; தமிழரசி, 13, ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர். அதேபோல், 16 வயது பிரிவில், 600 மீ., ஓட்டத்தில் மனுஷா, 15, உயரம் தாண்டுதலில் நந்திகா, 16, நீளம் தாண்டுலில் ரமிதா, 15, வட்டு எறிதலில் கொஷிகா, 14, குண்டு எறிதலில் திவ்யா தர்ஷினி, 15, ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றி அசத்தினர்.