பல்லி விழுந்த சுண்டல் வினியோகம் உதவி பேராசிரியர்கள் மயக்கம்
சென்னை, சென்னை பல்கலைகிண்டி வளாகத்தில், 'நான் முதல்வன்' திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில், பல்லிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய உதவி பேராசிரியர்களுக்கு, முதற்கட்ட பயிற்சி, சென்னை பல்கலை கிண்டி வளாகத்தில் நடந்து வருகிறது.மூன்றாவது நாளாக, நேற்று நடந்த வகுப்பில், அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளைச் சேர்ந்த 100 உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.இவர்களுக்கு நேற்று காலை 11:00 மணிக்கு வழங்கப்பட்ட சுண்டலில், இரண்டு பல்லிகள் இறந்த நிலையில் கிடந்தன. இதை அறியாமல் சுண்டல்சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 17 ஆம்புலன்ஸ் வாகனங்களில், அவர்கள்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதையடுத்து, சுண்டல் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு மாதிரிகள், ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.மேலும், தரமான உணவு வழங்காததை கண்டித்து, பேராசிரியர்கள் பயிற்சி மையத்தில் திடீர் முற்றுகை போராட்டத்தையும் நடத்தினர்.அவர்களிடம், அதிகாரிகள் சமரசப் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.